×

கீரிப்பாறை அருகே விடிய விடிய முகாமிட்டு வாழை, ரப்பர் பயிர்களை துவம்சம் செய்த யானைகள்: பீதியில் விவசாயிகள்

பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைக்கூட்டம் வாழை, ரப்பர் பயிர்களை விடிய விடிய துவம்சம் செய்தன. இதனால் விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அடுத்த தாடகை மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது யானை, கரடி, மிளா, சிறுத்தைகள் என்று வனவிலங்குகள் அடிக்கடி மக்களை அச்சுறுத்தும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழை, தென்னை, ரப்பர் மரங்களை நாசம் செய்து விடுகின்றன.

இது தவிர தொழிலாளர்களை தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படுவது உண்டு. பயிர்களை சேதப்படுத்தியதால் ஏற்படும் நஷ்டம் ஒருபக்கம், உயிரை காப்பாற்றுவது மறுபக்கம் என்று விவசாயிகளின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது. பொதுவாக கோடை காலங்களில் யானை கூட்டம் தண்ணீரை தேடி மலையில் இருந்து கீழே இறங்கி விவசாய நிலத்துக்கு வருகின்றன. இந்தநிலையில் கீரிப்பாறை தொழிலாளர் குடியிருப்பு அருகே நேற்று மாலை திடீரென யானைகள் கூட்டமாக உலா வந்தது. திடீரென அதன் அருகே உள்ள தொழிற்கூடத்தின் காம்பவுண்டு சுவரை இடித்து தள்ளி உள்ளே புகுந்த யானைகள் அங்குள்ள 40 ரப்பர் மரங்களை வேருடன் பிடுங்கி நாசமாக்கியது. குடிநீர் இணைப்புகளையும் காலால் மிதித்து உடைத்தது.

யானைகள் மரக்கிளையை ஒடிக்கும் சத்தம், பிளிறும் சத்தம் கேட்டதால் எச்சரிக்கையான விவசாயிகள் செய்வது அறியாமல் பீதியுடன் திகைத்து நின்றனர். அப்போது 3 யானையை பார்த்து உள்ளனர். ஆனால் அந்த பகுதி அடர்ந்த மரங்கள் நிறைந்து உள்ளது என்பதால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. 5 அல்லது 6 யானைகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சேகர் என்பவரது நிலத்தில் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களை தின்று தீர்த்தது. நன்றாக குலை தள்ளிய நிலையில் விரைவில் அறுவடைக்கு தயாரான வாழைகளை தன் கண்முன்னே யானைகள் ஒடித்து தின்றதை அவரால் தூரத்தில் நின்று கண்கலங்கியபடி பார்க்க மட்டுமே முடிந்தது. விடிய விடிய அந்த பகுதியில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம் இன்று காலையிலும் தீவன வேட்டையை தொடர்கிறது.

இதுகுறித்து அழகியபாண்டியபுரம் வன அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வனத்துறையினர் இந்த யானைக்கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுவாக காட்டுப்புதூர், திடல் பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. எனவே பலாப்பழ வாசனையால் கவர்ந்திழுக்கப்பட்டு யானைகள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவை பொதுவாக ஏப்ரல், மே மாதத்தில் தான் மலையில் இருந்து கீழே இறங்கி வரும். ஆனால் தற்போது யானைகள் முன்கூட்டியே வந்துவிட்டதால் விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர். ரப்பர் பால்வெட்டும் தொழிலாளர்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள்.

 

The post கீரிப்பாறை அருகே விடிய விடிய முகாமிட்டு வாழை, ரப்பர் பயிர்களை துவம்சம் செய்த யானைகள்: பீதியில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Keeripara ,Bhootapandi ,Kanyakumari district ,Thadagai hills ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்...